சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமைபட கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் காணொளி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர், சிறந்த கட்டமைப்புகள், அதிநவீன ஆற்றல்கள், தலைசிறந்த வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட மாநிலமாக தமிழக மருத்துவத் துறை திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
பல நாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் மிக நுண்ணிய மருத்துவ சிகிச்சைகளை நாடி தமிழகம் வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவத் துறையில் பல முன்னோடித் திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்ட பழனிசாமி, மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்க அரசு அரும்பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்குத் தலைசிறந்த சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் ரூ. 190 கோடி செலவில் அதிநவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உடல் உறுப்பு நன்கொடையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதையும் அவர் சுட்டினார். அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் பழனிசாமி கூறினார். இதனிடையே, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் 2021-22 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை இடம்பெறும் என்றார் அவர்.
மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவ பல்கலைக்கழகங்களைத் தொடங்க வழி ஏற்பட்டு இருப்பதாகவும் பழனிசாமி கூறினார்.