கொவிட்-19 நெருக்கடி காரணத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைச் சிறப்பு விமானங்களின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
'வந்தே பாரத்' எனும் இத்திட்டம் வழி செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்ட பிறகு அரசாங்கத் தனிமைப்படுத்துதல் வளாகங்களில் 14 நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.
இருப்பினும் இத்திட்டம் மூலம் பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா கிருமிக்கான பரிசோதனையைச் செய்து, கிருமித்தொற்று இல்லை என்று மருத்துவச் சான்றிதழுடன் வருவோருக்கு அரசாங்கத் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை தேவையில்லை என்ற தளர்வு குறித்து சுகாதாரத் துறை புதிய நடைமுறை ஒன்றை அறிவித்தது.
இதை இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் செயல்படுத்தத் தொடங்கியிருந்தாலும், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் மட்டும் செயல்படுத்த மறுக்கின்றன. தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பு அதிகமாக இருப்பதால் இத்தளர்வுகளை அனுமதிக்கத் தாங்கள் தயாராக இல்லை என்று கூறும் அதிகாரிகள், அந்தந்த மாநிலங்கள் சூழ்நிலைக்கேற்பத் தளர்வுகளைச் செயல்படுத்தலாம் என்று சுகாதாரத் துறை கூறியதையும் சுட்டுகின்றனர்.
இந்நிலையில் சிறப்பு விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்திறங்கும் பயணிகள் தேவையான மருத்துவச் சான்றிதழை வைத்திருந்தும் அரசாங்கத் தனிமைப்படுத்துதல் வளாகங்களுக்கு அனுப்பப்படும் சூழலை எதிர்த்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனராம்.
நிலையை அறிந்துகொண்ட வேறு சிலர், சென்னைக்கு நேரடியாகச் செல்லாமல் வேறு நகரங்களில் இறங்கி பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை வழியாக சென்னையை அடைகின்றனர்.

