குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை

1 mins read

கோவை: ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் நிலக்கடலை சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அந்த நிலக்கடலையை அகற்றி குழந்தையைக் காப்பாற்றினர்.

திருப்பூரைச் சேர்ந்த கனகராஜின் ஒன்றரை வயது குழந்தை மலர்விழி கடந்த 18ஆம் தேதி வீட்டில் நிலக்கடலை சாப்பிட்டபோது அதில் ஒரு கடலை மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படவே கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் கனகராஜ்.

அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்நோக்குக் கருவி மூலம் மருத்துவர்கள் குழு நிலக்கடலையை வெற்றிகரமாக அகற்றினர்.

இந்த அடைப்பை சரிசெய்யாமல் இருந்திருந்தால் குழந்தையைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கும் என்று குறிப்பிட்ட மருத்துவர்கள் குழந்தைகள் சாப்பிடும்போது பேச்சுக் கொடுக்கவோ சிரிப்புக்காட்டவோ கூடாது என அறிவுறுத்தினர்.

அவ்வாறு செய்தால் சாப்பிடும் பொருள் தவறாக மூச்சுக்குழாய்க்குள் செல்லும் விபரீதத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.