சென்னை: தமிழகத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கும் நிலையில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இம்மூன்று மாவட்டங்களிலும் கிருமித் தொற்றுப் பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கிருமித் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13,508 ஆகும். விருதுநகரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 11,341 பேர் குணமடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் இதுவரை 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 385,352ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் தற்போது 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

