சென்னை: கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 391,303 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 50,184 பேர் முதியோர்கள் என்றும் 18,433 பேர் குழந்தைகள் என்றும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
236,294 பேர் ஆண்கள், 154,980 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 6,721 பேர் நோய்த்தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். இதற்கிடையே சென்னையில் கிருமித்தொற்று விகிதம் அதிகரித்ததை அடுத்து நகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.
நோய்த்தொற்று விகிதம் கடந்த வாரத்தில் 1.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 18ஆக இருந்த நிலையில் தற்போது 36 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை ஐந்தரை லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமி தாக்கத்தால் ஏராளமானோர் வருமான இழப்பைச் சந்தித்துள்ளனர். அதன் எதிரொலியாக பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர் பலர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதையடுத்து தனியார், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் ஏராளமான குழந்தைகள் அரசுப் பள்ளிக்கு மாறிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
பெண் எம்எல்ஏவுக்கு கிருமித்தொற்று பாதிப்பு
பன்ருட்டி தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
42 வயதான இவர், ஊரடங்கு வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் சத்யாவுக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே திமுக எம்எல்ஏ கணேசன் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும், எம்பிக்களும் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

