சென்னையில் 2 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்

சென்னையில் 2 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்

2 mins read
3462a134-6240-4714-968b-ddc45c1f7676
-

சென்னை: கொரோனா தடுப்பு மருந்து சோதனை சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்ட்' என்ற தடுப்பூசி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உலகளவில் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன. 'இந்தியாவில் பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள 'கோவாக்சின்' தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்ட்' தடுப்பூசி சென்னையில் சுமார் 300 பேரிடம் பரிசோதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு 24 நாட்களில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பிறகு உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒடிசாவில் உள்ள சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து 'கோவிஷீல்ட்' தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

இந்தத் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்திப் பரிசோதிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு கடந்த மாதமே வழங்கி விட்டது. இதையடுத்து அந்தத் தடுப்பு மருந்துக்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கிடையே 'கோவிஷீல்ட்' தடுப்பு மருந்து நேற்று புனே நகரில் இரண்டு பேருக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

தன்னார்வலர்களான இருவருக்கும் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தின் மருத்துவர் சஞ்சய் லால்வானி தெரிவித்தார்.

தடுப்பு மருந்து செலுத்தப்படுவதற்கு முன்பாக மருத்துவர்கள் இருவருக்கும் உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றை சரிபார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

புனேயில் ஐந்து தன்னார்வலர்கள் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தங்களை உட்படுத்த முன்வந்துள்ளனர்.

இந்தியாவில் 17 நகரங்களில் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்தப்படுகிறது. மொத்தம் 1,600 பேரிடம் சோதனை நடத்தப்படும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.