சென்னை: பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார்.
அவருக்கு அடுத்த கட்டமாக 'ஃபிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவிப்பதாக எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
73 வயதான எஸ்.பி.பாலா கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது.
எனினும் தற்போது மயக்க நிலையில் இருந்து 90 விழுக்காடு மீண்டுள்ளதாகவும் மிக விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புவதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.பி.யின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நுரையீரல் இயக்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் ஒரு வாரத்துக்குப் பின்னர் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள 'எக்மோ' கருவியை விலக்கி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே எஸ்.பி.பாலா சிகிச்சை பெற்று வரும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலிக்க விட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

