நீலகிரி: கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணும் அவரைக் காப்பாற்ற முயன்ற இரு சகோதரர்களும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சோக சம்பவம் கூடலூரில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். நேற்று முன்தினம் மாலை 22 வயதான அவரது மகள் சுகன்யா வீட்டுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றார்.
அப்போது புதர்கள் மண்டியிருந்த எழுபது அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் அவர் தவறி விழுந்தார். அவரது கூக்குரலைக் கேட்டு 24 வயதான உடன்பிறந்த சகோதரர் தமிழழகனும் சித்தப்பா மகன் முரளியும் (வயது 26) சுகன்யாவை மீட்க விரைந்து வந்துள்ளனர்.
இருவரும் கிணற்றுக்குள் குதித்து சுகன்யாவை மீட்க முயற்சித்தபோது கிணற்றில் நிறைந்திருந்த சேற்றில் சிக்க நேர்ந்தது. சிறிது நேரத்தில் மூவருமே சேற்றுக்குள் மூழ்க நேரிட்டது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மூவரையும் தேடியபோது அவர்கள் இறந்துவிட்டது தெரியவந்தது. பின்னர் மூவரின் உடல்களையும் வீரர்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

