கடலூர்: இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் கிருமி நோயாளிகள் அதிக அளவில் குணமடைவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி எதனால் அந்த முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று விளக்கி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைககள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். சேலம், கோவை, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, நெல்லை என 15 மாவட்டங்களில் ஆய்வு நடத்திய அவர் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் நிறைவுற்ற ரூ.25.54 கோடியிலான புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி ரூ.32.16 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசால் முழுமூச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, தனிக்கவனம் செலுத்தப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து அவர்களை குணமடையச் செய்யும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
"போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிருமித்தொற்றுக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சையளித்து வருகின்றனர்.
"இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் செய்கின்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தக் காரணங்காளல் தொற்று பரவல் குறைக்கப்பட்டு நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது," என்று கூறினார் முதல்வர்.

