கொவிட்-19 சிகிச்சை பலனின்றி கன்னியாகுமாரி எம்.பி. வசந்தகுமார் காலமானார்

1 mins read
d0170a30-ebda-4a69-9d05-6c0dc3488309
இரண்டு முறை தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.படம்: டுவிட்டர் -

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 70.

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரு வசந்தகுமாருக்கும் கிருமி தொற்றியது.

இம்மாதம் 10ஆம் தேதி அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தென்பட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி இன்றிரவு சுமார் 7 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இரண்டு முறை தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிரபலமான வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் நிறுவனருமான அவர், வசந்த் டிவி எனும் தொலைக்காட்சி ஒளிவழியையும் நிறுவியவர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக செயல் தலைவருமான திரு வசந்தகுமாரின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்னாரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடியும் தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19உயிரிழப்பு