சென்னை: கொரோனா கிருமிப் பரவல் காரணமாக விதிக்கப்பட்டு உள்ள பொது முடக்கம் ஐந்து மாதங்களைக் கடந்து ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.
இதனால் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து இன்று தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு தளர்வுகள் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.
மக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இ-பாஸ் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் தமிழக அரசு அதில் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தம் காரணமாக வருபவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்றும் 72 மணி நேரத்தில் திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு முதல் கட்ட தளர்வை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
"தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நூலகங்கள், பிற பெரிய நூலகங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார். ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
இந்த நிலையில் நூலகத்துறை வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நூலகங்கள் செயல்படவேண்டும், பகுதி நேர நூலகங்களுக்கு அனு மதியில்லை, அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு அனுமதியில்லை, நூலகர்கள்/ நூலகப் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது அவசியம், வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளிலிருந்து நூலகப் பணியாளர்கள்தான் எடுத்து கொடுக்க வேண்டும், 65 வயது மேற்பட்டவர்களுக்கு நூலகங்களில் அனுமதியில்லை, 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நூலகத்தினுள் அனுமதி இல்லை என்று நூலகத் துறை தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை பொறுத்தவரையில் மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுவருவதாக கூறப் படுகிறது. அன்றாடம் பணிக்குச் செல்பவர்கள் பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கு குறைவாக உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய கோயில்களுக்கு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது.
அரசு அலுவலகங்கள் சுழற்சி முறையில் இயங்கிவரும் நிலையில் 100 விழுக்காடு ஊழியர்களுடன் முழு வீச்சில் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்புள்ள ஊழியர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர் களுடன் தளர்வு பற்றி ஆலோசனை நடத்துகிறார்.

