தனது காருக்குள் கடிதம் ஒன்றை வீசியதற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்ட பழ வியாபாரியை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
அண்மையில் டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி நீடாமங்கலம் வழியே தஞ்சை சென்றபோது வழியில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்திவரும் செல்வராஜ் என்பவர் தாம் எழுதிய ஒரு கடிதத்தை முதல்வரிடம் அளிக்க முயற்சி செய்துள்ளார்.
அதற்கு வாய்ப்பில்லாமல் போகவே எப்படியாவது கடிதத்தை முதல்வரிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் முதல்வரின் காருக்குள் கடிதத்தை வீசினார் செல்வராஜ்.
இதைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் காருக்குள் என்ன வீசினாய் என்று கேட்டு செல்வராஜை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காருக்குள் வீசப்பட்ட கடிதத்தைப் படித்துப் பார்த்த முதல்வர் பழனிசாமி பின்னர் பழவியாபாரியான செல்வராஜை அழைத்து வர உத்தரவிட்டார். நேரில் வந்த அவரிடம் கடிதத்தை இவ்வாறு வீசக்கூடாது என்று அறிவுறுத்தியதுடன் அவருக்குப் பூங்கொத்தும் வழங்கினார்.
முதல்வர் அழைத்ததால் பயந்துகொண்டே அவரைச் சந்திக்கவந்த தமக்கு பூங்கொத்து கிடைத்தது இன்ப அதிர்ச்சி அளித்தது என்று செல்வராஜ் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார். மேலும் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.


