சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கிருமித் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நோய்த்தொற்றுப் பரவல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரேநாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் கிருமித் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகத்தில் 81,000 பேருக்கு கிருமித் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் புதிதாக 6,352 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 149 இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்படுகின்றன.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 415,590 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமையன்று 6,045 பேர் கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 355,727 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 52,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் தொற்றுப் பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே ஜெகத்ரட்சகனைத் தொடர்ந்து மேலும் இரண்டு திமுக எம்பிக்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை தொகுதி திமுக எம்பியான ஞானதிரவியத்துக்கும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானதை அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கிருமித் தொற்றால் தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில அதிகாரிகள் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 16 போலிசாருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
இதுவரை சென்னையில் மட்டும் 2,209 போலிசார் கிருமித் தொற்றுக்கு ஆளானதாகவும் இவர்களில் 1,803 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் குறைவானோர் பலி
தமிழகத்தில் ஒரேநாளில் 87 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய தினங்களில் முதன்முறையாக பலி எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது. ஏழு வயது சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். மாநிலம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனினும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.

