சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோரிடம் ஒரு காசு கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில் மாணவர் சேர்க்கைக்காக கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியாகி உள்ள செய்திகள் கவலை அளித்திருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களிடம் இருந்து நன்கொடை வசூலிப்பதாக சில பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
"தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதற்காக நன்கொடை என்ற பெயரில் கட்டணம் வசூல்செய்யப்படுவது தவறு. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவரும் பெற்றோரிடம் கட்டணம் செலுத்தும்படி கூறி சிரமப்படுத்தக்கூடாது," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெற்றோரிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் என்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கல்வித்தரத்தை மேம்படுத்தியும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்தும் அரசுப் பள்ளிகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

