சென்னை: கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொது முடக்க காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள சீமான், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி மாணவர்களையோ பெற்றோரையோ இவ்வாறு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
கல்விக் கட்டணம் தொடர்பாக அரசின் உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் அப்பட்டமாக மீறியுள்ளது என்றும் அப்பல்கலைக்கழகத்தின் எச்சரிக்கையானது சட்டவிரோத நடவடிக்கை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
"மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் கல்விக்கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது என்பது கட்டாய இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்," என்று சீமான் கூறியுள்ளார்.

