சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், நாளை மறுநாள் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பயணிகள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு 9 சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்து, அதன்படி ரயில் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் நடப்பில் இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப் பட்டன.
குறிப்பாக, மாவட்டங்களுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகளும் பயணிகள் ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் செப்டம்பர் 7 முதல் இயங்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னையில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவை விதி முறைகளின்படி, ஒவ்வொரு நிறுத்தத்திலும் 20 நொடிகள் மட்டுமே நின்றுசெல்லும் மெட்ரோ ரயில்கள், இனி 50 நொடிகள் நிற்கும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமரவேண்டும்.
மக்கள் நெரிசலில் சிக்காமல் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கும் வகையில் இந்த அறி விப்புகள் வெளியாகியுள்ளன.
சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை -கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் - திருச்சி, கோவை - மயிலாடு துறை, சென்னை எழும்பூர் - காரைக்குடி, மதுரை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையத்துக்குள் நுழையும்போதும் பயணத்தின்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

