கல்வித்துறை: தமிழகத்தில் இணைய வகுப்புகள் கட்டாயமல்ல

1 mins read
a6332ca8-b2db-4cbf-98ab-5f83a1026683
படம்: ஏஎஃப்பி -

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை எப்போதுதான் திறப்பார்களோ என்பது பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

கொரோனா பரவலை முறியடிப்பதற்காக அனைத்து கல்வி மையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், "பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புகள் கட்டாயம் அல்ல. மாணவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் வற்புறுத்தக்கூடாது," என்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களும் கடந்த ஜூன் மாதம் முதல் வீட்டில் இருந்தபடியே கைபேசி அல்லது கணினி மூலம் பாடங்களைக் கற்று வருகின்றனர்.

இணையம் மூலமே வீட்டுப் பாடம் கொடுப்பதும், பாடங்களுக் கான பயிற்சித் தேர்வுகளை நடத்துவதும் வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், பல மாணவர்களும் இந்த வசதியைப் பெற சிரமத்தை எதிர்நோக்கி வருவதால், இந்த இணைய வகுப்புகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

"எங்களால் இணைய வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. எங்களது வீட்டில் காெணாளிக் காட்சியைப் பெறும் வசதி இல்லை. இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்," என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், "தமிழகத்தில் பள்ளி மாணவர்களை வகுப்புக்கு வரும்படி வற்புறுத்தக்கூடாது. மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.

"இணைய வகுப்புகளை வைத்து மதிப்பெண்கள் போடக் கூடாது. இணைய வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு கணக்கிடுவது கூடாது," என்று சிஜி தாமஸ் வைத்தியன் உத்தரவிட்டுள்ளார்.