கோவை: கோவையில் ஈமு கோழிப் பண்ணையை நடத்தி, பொது மக்களின் பணத்தை மோசடி செய்த மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பத்மநாபன், ஜெயக்குமார், ராஜசேகரன் ஆகிய மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறையும் மொத்தமாக ரூ.58 லட்சம் அபராதம் செலுத்தவும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, பத்மநாபன், ராஜசேகரன் ஆகிய இருவர் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலை ஆகினர். தலைமறைவான ஜெயக்குமாருக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக் கடவு பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜேப்பியார் என்ற ஈமு கோழிப் பண்ணையை ஜெயக்குமார், பத்மநாபன், ராஜசேகரன் ஆகிய மூவரும் நடத்தி வந்தனர்.
"தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசைவார்த்தைகளைக் கூறி விளம்பரம் செய்த இவர்களை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ரூ.1.66 கோடியை முதலீடு செய்தனர்.
ஆனால், மூவரும் தாங்கள் சொன்னபடி பணத்ைதத் தராமல் மோசடி செய்ததால் பொதுமக்கள் போலிசில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜெயக்குமார், ராஜசேகரன், பத்மநாபன் ஆகியோர் கைதாகினர்.
இந்த மூவரும் விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

