நீலகிரி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான நீலகிரியில் உள்ள ஊட்டியும் திண்டுக்கல்லில் உள்ள கொைடக்கானலும் நேற்று முதல் பொதுமக்களின் வருகைக்காக திறந்துவிடப்பட்டன.
கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்கும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்த ரவு அமலில் இருந்து வருகிறது.
நடப்பில் உள்ள இப்போதைய ஊரடங்கில் பலவித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பி வருகிறது.
ஊரடங்கு தளர்வுகளின்படி ஆலயங்கள் திறக்கப்பட்டுவிட்டன. பேருந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது, சுமார் 6 மாதங்களுக்குப் பின் சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு வருகை தரும் வெளிமாவட்டப் பயணிகள் இ-பாஸ் பெற்று வரவேண்டும். அதேசமயம், உள்மாவட்டப் பயணிகள் அடையாள அட்டை கொண்டுவந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா டி கார்டன், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட இயற்கை எழில் சிந்தும் இடங்கள் அனைத்தும் நேற்று காலை முதல் திறக்கப்பட்டன.
இதுதொடர்பாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் கூறும்போது, "பூங்காவில் பார்வையாளர்கள் உள்ளே நுழையவும் வெளியேறவும் வெவ்வேறு வழிகள் உள்ளன.
"பூங்காவினுள் நுழையும் பார்வையாளரின் உடல் வெப்பநிலையும் சோதிக்கப்படுகிறது. பார்வையாளர் கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பூங்காவைப் பார்வையிடலாம்," என்றார்.
இதற்கிடையே, நீலகிரியில் சுற்றுலாத் தலங்களை ரசிக்க பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். அதேபோல கொடைக்கானல் பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளதால் இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் முதற்கட்டமாக பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து சுற்றுலாத் தலங்களும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. மக்களின் வருகையும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
கோப்புப்
படம்: ஊடகம்

