பூந்தமல்லி: வரும் அக்டோபரில் கொவிட்-19 கிருமிப்பரவலின் 2வது அலை வரும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த அச்சத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
"நாம் விழிப்புணர்வுடன் பாது காப்பாக இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அக்டோபரில் கொரோனா கிருமித்தொற்றின் 2வது அலை சுனாமி போல் பல்கிப் பெருகி மக்களைப் பாதிப்பதை யாராலும் தடுக்கமுடியாது," என்றார் அமைச்சர்.
திருவேற்காட்டில் ரூ.97 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நகராட்சிக் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி காணொளி வழி திறந்துவைத்தார்.
அதனை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் பாண்டியராஜன், நகராட்சியால் பயன்படுத்தப்படும் குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்களை பச்சைக்கொடி காட்டி தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மெத்தனமாக எடுத்துக்கொண்டால் அக்டோபரில் கொரோனாவின் 2வது அலை வருவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆனாலும், "கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
"எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் சுவரொட்டியாக ஒட்டி உள்ளனர். அதில் நான் கருத்துச் சொல்லமுடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லி அவர்கள் வாக்கு கேட்டு போகாத வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், அவர்களின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்குத் தான் உள்ளது," என்றார்.

