சென்னை: மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது.
தமிழகத்தில் சுமார் 1.17 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத பதிந்துகொண்டுள்ளனர்.
பிளஸ் 2 முடித்த பிறகு மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு எழுதியாக வேண்டும்.
இவ்வாண்டுக்கான 'நீட்' தேர்வு மே 3இல் நடப்பதாக இருந்தது.
ஆனால் கொரோனா கிருமிப் பரவல் பிரச்சினை காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை இந்தத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகம் உட்பட மொத்தம் 16 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிருமித் தொற்று காரணமாக நீட் தேர்வுக்கு வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை, தானியங்கி 'லேசர்' கருவி மூலம் பரிசோதிக்கப்படும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அனைவரும் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்த பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்துக்குள் கூட்டமாக நிற்கக் கூடாது. மின்னணு சாதனங்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. விண்ணப்பத்தில் பதிவேற்றிய புகைப்படத்தைபோல நுழைவுச் சீட்டில் ஒட்ட கொண்டு வர வேண்டும் உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

