தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் முதல் சிறு கட்சிகள் வரை தீவிரமாக இறங்கி உள்ளன. இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படலாம் என்பதால் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. ஆனால், ரஜினி ரசிகர்கள் தங்களது தலைவரின் அரசியல் வருகையை ஆவலோடு எதிர்பார்த்த நிலை மாறி பொறுமையை இழந்து வருகின்றனர்.
ரஜினி இப்போதாவது கட்சியை அறிவிப்பாரா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் விவகாரங்களுக்கு எப்போதுமே சுவரொட்டிகள்தான் முன்னணியில் இருக்கும். அதுவும் பெரும்பாலும் மதுரையில் இருந்துதான் தொடங்கும்.
ரஜினி ரசிகர்களும் அதனையே பின்பற்றி தற்போது ரஜினி அரசிய லுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். மதுரையில் தொடங்கி வேலூர் வரை ஏராளமான சுவரொட்டிகள் கடந்த நான்கைந்து நாட்களாக ஒட்டப்பட்டு வருகின்றன. கோவை ரசிகர்கள் நேற்று முன்தினம் சுவரொட்டிகள் மூலம் ரஜினிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இவை எல்லாம் இப்போது இல்லாவிட்டால் எப்போது என்று அவர்கள் தங்களது தலைவருக்குக் கேள்வியாக வைத்து வருகின்றனர்.
ஊடகங்களிடம் பேசிய ரஜினி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தோர், "தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார். இதெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. கூடிய சீக்கிரம் அவர் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்," என்று ஆதங்கப்படுகின்றனர்.
2017ஆம் ஆண்டின் இறுதிநாளில் தமது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவழைத்துப் பேசிய ரஜினி, "சட்டமன்றத் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம். போர் வரும்போது நாங்கள் களத்தில் இருப்போம்," என்று உறுதிபடக் கூறினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து இதனை செயல்படுத்தப்போவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படாத நிலையில் ரஜினி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தையும் கோரிக்கையையும் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர்.
மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம்தான் இருக்கு. இப்போதுகூட அரசியல் முடிவை தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார் தலைவர். பூத் கமிட்டி அமைக்கச் சொன்னார் தலைவர். அதைச் செய்துகொண்டு இருந்தோம். அந்தப் பணி சில மாவட்டங்களைத் தவிர 40 விழுக்காடுகூட பூர்த்தியாகாத நிலையில் கொரோனா பிரச்சினை வந்ததால் எல்லாம் நின்று போய்விட்டது," என்கின்றனர்.
இதற்கிடையே, விகடன் இதழிடம் பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறியுள்ளார்.
"ரஜினியைப் பொறுத்தவரை கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டார். அவரைத் தேவையில்லாமல் இழுக்கிறாங்க. இங்கே நடந்துட்டு இருக்குற எல்லாமே சந்தைக்கான வணிகம். அவரோட குரலுக்கு வீச்சு அதிகம்கிறதால் அவரைப் பயன்படுத்திக்கப் பார்க்குறாங்க," என்கிறார் ஜனநாதன்.
இதற்கிடையே, சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

