முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை

1 mins read
4ba8ff6e-a88b-42e0-88fc-fb8c60a3e081
-

சென்னை: தமிழகத்தில் நாளை சட்டமன்றம் கூடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் பழனிசாமி உட்பட எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னதாக, சட்டசபைக்கு வருபவர்களுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சட்டசபை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்திருந்தார்.

சட்டசபையில் பணியாற்ற வேண்டிய ஊழியர்கள், பாதுகாவலர்கள், துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான கொரோனா நோயின்மைச் சான்றிதழை பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

முதல் கட்டமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது வீட்டில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவர்களுடைய வீடுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார்.

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் நேற்று முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்