சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பல லட்சம் மதிப்புள்ள 'பாண்டியன் கொண்டை' தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பெருமாள் பக்தரான முதலாம் சுந்தர பாண்டியன், பெருமாளுக்கு வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
அன்று முதல் அந்த கிரீடம் 'பாண்டியன் கொண்டை' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 'சலானி ஜுவல்லர்ஸ்' உரிமையாளரான ஜெயந்திலால் சலானி, தனது மகன் ஸ்ரீபால் சலானி விருப்பத்தின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு 'பாண்டியன் கொண்டை' ஒன்றை உபயமாக வழங்க முடிவு செய்தார்.
கடந்த 11 மாதமாக மூன்று கிலோ தங்கத்தில் 'பாண்டியன் கொண்டை' உருவாக்கப்பட்டது.
இதில் ரோஸ்கட் டைமண்ட்ஸ் 5,645, ரூபி கற்கள் 2,761, புளூ சஃபையர் கற்கள், 36, 'எமரால்டு' எனப்படும் பெரிய பச்சை மரகதக்கற்கள் 3, சிறிய மரகதப் பச்சை கற்கள் உட்பட 209 கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதன் மதிப்பு பற்றி தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
"பாண்டியன் கொண்டை அபூர்வமானது என்பதால் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள தனது கடையில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை 'பாண்டியன் கொண்டை' காட்சிக்கு வைக்கப்படும் என்று அவர் சொன்னார்.
பின்னர் நல்ல நாள் பார்த்து பாண்டியன் கொண்டை கிரீடத்தை கோயிலுக்கு சமர்பிக்கப் போவதாக வும் ஸ்ரீபால் சலானி கூறினார்.

