சென்னை: 14ஆம் தேதி சட்டமன்றம் கூடுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், அதே சமயத்தில் மூன்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு இத்தொற்று இருந்தது உறுதியானது.
மூன்று நாட்களுக்கு தொடர உள்ள தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று திங்கள் முதல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கிருமி பரிசோதனை நடந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கிருமித்தொற்று பாதிப்பில்லை.
"ஆனால், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. சண்முகநாதன், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மூவரும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் மேலும் ஒருவருக்கும் இப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று அவர்கள் கூறினர்.

