சென்னை: தமிழகத்தில் ஒருபுறம் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற போராட்டம் வெடித்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புக்கான 'நீட்' எனப் படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நேற்று நாடெங்கும் நடந்தது. தமிழகத்தில் 117,990 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.
கொரோனா கிருமிப் பரவலின் தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், நீட்தேர்வை ரத்து செய்யும்படி பொதுமக்களும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிர மாக வலியுறுத்தி வந்தன. மதுரை நரிமேடு பகுதியிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, தருமபுரியில் தேர்வு பயத்தில் தனது உயிரை விட்ட மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, தருமபுரியில் உள்ள மருத்துவமனை வளாகம் முன்பு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
"நீட் தேர்வை ரத்து செய்தால் தான் உடலை வாங்குவோம்," என் றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையே, இந்த நீட் தேர்வு பயத்தால் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த 9ஆம் தேதி தனது உயிரைவிட்டார்.
அந்த சோகம் மறைவதற்குள் சனிக்கிழமையன்று ஒரேநாளில் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரி மாணவர் ஆதித்யா, திருச்செங்கோடு மாணவர் முருகேசன் ஆகிய மூவரும் நீட் தேர்வு பயம் காரணமாக உயிரை விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறுைகயில், "நீட் தேர்வுக்குப் பயந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும். வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் உள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், "மாணவச் செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. மாணவர்கள் மன உறுதியையும் விடாமுயற்சியையும் வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்," என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின், "திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். இது உறுதி," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டுவிட்டரில் நீட் தேர்வை தடை செய்து தமிழக மாணவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தும் 'ஹேஷ்டேக்' பலராலும் பகிரப்பட்டு வந்தது.

