4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து

4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து

1 mins read
d3135771-a025-401a-9289-cc6450b90e4d
படம்: ஏஎஃப்பி -

மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் பழனிசாமி அறிவித்த இரண்டாயிரம் மருந்தகங்கள் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

தமிழகத்தில் கொவிட்-19 சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்த 4 தனியார் மருத்துவமனைகள் குறித்து அரசுக்கு புகார்கள் வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அம்மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றுக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள்தான் என்று குறிப்பிட்ட அவர், முதல்வரின் வழிகாட்டுதலின்படி அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகப் பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா கிருமித் தொற்றில்இருந்து காக்கும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கொவிட்-19 சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. சில மருத்துவமனைகள் முன்பணம் செலுத்தாவிட்டால் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.