பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியது

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியது

1 mins read
387b63b7-f5d1-496d-a7e3-82c536d46b48
மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள். படம்: ஊடகம் -

தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து 447,366 பேர் முழுமையாக மீண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளானோரில் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக மேலும் 5693 பேருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டது. இவர்களுள் 149 குழந்தைகளும் 796 முதியோர்களும் அடங்குவர். அதிகபட்சமாக சென்னையில் 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 57 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்க்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு 0.8 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது. இது தொடர்பான அதிக தகவல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி செல்லகுமாருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தங்கவேலு கொரோனா கிருமித் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 69. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில் சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.