சேலம்: தமிழகத்திலும் கேரளாவிலும் நிதி நிறுவனம் நடத்தி 4,700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த இருவரை சேலம் போலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கௌதம் ரமேஷ் என்பவர் பிரவீண்குமார் (வயது 28) உள்ளிட்ட நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அது நான்கு லட்சமாக திருப்பித் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் கௌதம் ரமேஷ்.
இந்த அறிவிப்பை நம்பி ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர்.
இதையடுத்து சேலத்திலும் இந்நிறுவனத்தின் கிளை திறக்கப்பட்டது. அங்கும் கோடிக்கணக்கில் பணம் திரட்டிய கௌதம் ரமேஷ் உள்ளிட்டோர் திடீரென தலைமறைவாயினர். இது குறித்து காவல்துறையில் ஏராளமானோர் புகார் அளித்தனர்.
இவ்வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ரமேஷ் கௌதமும் பிரவீண் குமாரும் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இவர்கள் நிதி நிறுவனம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களிடம் பணமோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுவரை 4700 கோடி ரூபாய் வரை இருவரும் மோசடி செய்திருப்பதாக போலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.
விசாரணை தொடர்ந்து நீடித்து வருகிறது.

