புத்தாக்க மையமாக, அறிவுப் பெட்டகமாக தமிழகத்தை மாற்ற 3 புதிய கொள்கைகள்

புத்தாக்க மையமாக, அறிவுப் பெட்டகமாக தமிழகத்தை மாற்ற 3 புதிய கொள்கைகள்

1 mins read
15fb8712-cf43-4ad9-a0cb-42dbde9b040c
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மாநிலத்திற்கான புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கைத் திட்டத்தை வெளியிட்டார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: இந்தியாவிலேயே புத்தாக்கத்திலும் அறிவாற்றலிலும் தமிழகத்தைத் தலைநகராக ஆக்கும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாட்டிலேயே முதன்முதலாக அத்தகைய மூன்று திட்டங்களைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை சென்னையில் இணையம் வழி நடந்த 'கனெக்ட் 2020' மாநாட்டில் வெளியிட்டார்.

தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை, இணைய நம்பகத்தன்மை கொள்கை, தமிழக பாதுகாப்பு மற்றும் நெறிமுறை நுண்ணறிவுக் கொள்கை ஆகிய அந்த மூன்று கொள்கைகளும் மாநிலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் நடப்புக்கு வர பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களுக்குச் சேவை வழங்கும் இணையத்தளங்களையும் அரசாங்க கணினித் தகவல்களையும் பாதுகாக்க அந்தக் கொள்கைகள் வகைசெய்யும்.

கணினி மூலம் அரசு ஆளுமையை வெளிப்படையானதாகவும் ஆற்றல்மிக்கதாகவும் ஆக்குவதற்கு வகைசெய்யும் நம்பகத்தன்மைமிக்க இணையக் கொள்கை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் இடம்பெறுகிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்.

பல்வேறு துறைகளிலும் இயந்திர மனிதர்களை செயலில் இறக்கி உற்பத்தித்திறனையும் ஆற்றலையும் பெருக்கவும் இந்தக் கொள்கைகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தையும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளையும் பொறுத்தவரை, பலரும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 காரணமாக ஊரடங்கு இடம்பெற்று இருந்தாலும்கூட அந்தக் காலகட்டத்தில் ரூ. 31,464 கோடி முதலீட்டை உள்ளடக்கிய 42 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.