தமிழக முதல்வருக்கு கடும் பாதுகாப்பு

தமிழக முதல்வருக்கு கடும் பாதுகாப்பு

1 mins read
793a04e2-0c91-4d6c-b52d-84f218f65d73
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம் -

தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடிப்படைவாத அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலிசுக்கு உளவுத்துறை மூலம் நேற்று முன்தினம் கிடைத்த தகவல் அடிப்படையில், அம்மாநிலத்தின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மத அடிப்படைவாத அமைப்புகள், சமூக விரோத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது வீடு, அலுவலகம், அவர் பயணம் செய்யும் பாதைகள் ஆகியவற்றில் போலிஸ், உளவுத் துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் 24 மணிநேர பாதுகாப்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமையை அடிப்படையாக வைத்து, எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சுறுத்தலைத் தடுக்கும் விதமாக தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளுக்கும் அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்கும் நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக திரு பழனிசாமி தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவல் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, நேற்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

"இந்து முன்னணித் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், மாநில அளவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யூத குடியிருப்புகளில்," என்று தமிழக மூத்த போலிஸ் அதிகாரி தமிழக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்