விருதுநகர் மாவட்டம் குந்தலப்பட்டியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இவர், நாக்பூரில் பெறப்பட்ட உரிமம் மூலம் அனைத்து ஃபேன்ஸி ரக பட்டாசுகளையும் தயாரித்துவருகிறார். 15க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஃபேன்ஸி ரக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வெடி மருந்துகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஓர் அறை இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மற்ற அறைகளில் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. நேரடியாகவும் முறைமுகமாகவும் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் நெப்போலியன் என்பவர் தமது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு திடீரென்று இப்பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் இரு வீடுகளும் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கிய நெப்போலியனும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.