சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கும் இடையே மனவருத்தம் இருந்து வந்ததாகவும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ள தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வரையும் துணை முதல்வரையும் எனது இரு கண்களாக நினைத்து மக்கள் பணியாற்றி வருகிறேன் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
"கட்சியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு," என்றார் மணிகண்டன்.
இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதி அன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திடீரென ஓ பன்னீர்செல்வம் தனது பதவியை விட்டு விலக இருப்பதாகவும் ஜெய லலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் அரசு வாக னத்தை உபயோகிக்கப்போவ தில்லை என்றும் கூறப்பட்டது.
அத்துடன், நேற்று நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவரது பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும் தகவல்கள் வெளி வந்தன.
இந்நிலையில் தனது ஆதர வாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ பன்னீர்செல்வம், திடீ ரென அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்து அதில் பங்கேற்பதற்காக புறப்பட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த திடீர் முடிவை அடுத்து முதல்வருடன் ஓபிஎஸ் சமாதானம் ஆகிவிட்டாரா அல்லது அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

