சிவாஜி கணேசனுக்கு அமைச்சர்கள் மரியாதை

1 mins read
ea4a1582-bcda-41b1-a0dd-ea0d133e7647
படம்: ஊடகம் -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி படத்துக்கு தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா. வளர்மதி, தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்துகொண்டு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசனின் 'சிந்து நதியின் மிசை' போன்ற பாடல்களைப் பாடி அவரை நினைவுகூர்ந்தார்.

"சிவாஜி கணேசன் ஒரு வரலாறு, பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்," என்று அமைச்சர் ஜெயக் குமார் குறிப்பிட்டார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினரும் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்தனர்.

நேற்று காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் அவரது திரு உருவப்படத்துக்கு தமிழகக் காங் கிரஸ் கட்சி பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.