சென்னையில் நாளை 5ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை நகரில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பய ணம் செய்யும் இந்த புறநகர் ரயில் சேைவயை உடனடியாகத் தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அதிருப்தியுடன் இருந்து வந்த பொதுமக்கள், இப்போது தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
எனினும், நாளை முதல் இந்த புறநகர் ரயில் சேவையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் ெவளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு தளர்வின் காரணமாக அக்டோபர் 5 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை துவங்கும். ஆனால், முதற்கட்டமாக அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான சிறப்பு ரயிலாக மட்டுமே இது இயக்கப்படும்.
"மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியா வசியப் பணிகளை மேற்கொள் பவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
"அத்துடன், தமிழக அரசின் கீழ் பணியாற்றக்கூடிய ஊழியர்களும் இந்த ரயிலில் பயணிக்கலாம். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பரிசோதகர்களிடம் காண்பிக்கவேண்டும்.
"ரயில் பயணிகள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகளின் உடல் வெப்பமும் சோதிக்கப்படும்.
"அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும். பொதுமக்களுக்கு டிக்கெட் கிடையாது, அனுமதியும் கிடையாது," என்று கூறியுள்ளது.

