உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொவிட்-19 கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்கப் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு மலைக்கிராம மக்கள் மட்டும் இத்தொற்றால் தொட்டுக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக லட்சக் கணக்கான மக்கள் கிருமி பாதிப் பால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், கொரோனா என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கிராம மக்கள் இருப்பது மக்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கிராமத்தில் உள்ள எளிமையான வாழ்க்கைமுறையும் சுத்தமான சூழலும்தான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து ஏறத்தாழ 30 கி.மீ. தொலைவில் உள்ளது கீரிப்பாறை கிராமம்.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை அடுத்துள்ள அந்தக் கிராமத்தில் 103 குடும்பங்கள் உள்ளன. மொத்தம் 550 பேர் வசிக்கின்றனர். ரப்பர் தோட்டங்களைப் பராமரிப்பதுதான் இவர்களின் முக்கிய தொழில்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு இருந்தும் இக்கிராமத்தை மட்டும் நோய் அண்டவில்லை.
அவசியம் ஏற்பட்டால் ஒழிய இக்கிராமத்தை விட்டு இம்மக்கள் வெளியே வருவதில்லை.
சுற்றுச்சூழல் ஆரோக்கியமான தாக இருப்பதால் இக்கிராமத்தில் பெரும்பாலானோருக்கு இதுவரை காய்ச்சல் போன்ற சாதாரண உடல்நலக் குறைவுகள் கூட வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
காற்றும் தண்ணீரும் சுத்தமாக இருப்பதால் மக்களும் ஆரோக்கிய மாக உள்ளனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமத்திற்கு வரும் அதிகாரிகள் மூலமாகவே கொரோனா பற்றி கீரிப்பாறை மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
"நாங்கள் நெரிசலற்ற இடத்தில் வசிக்கிறோம். தூய்மையான காற்று, சுத்தமான நீர், அமைதியான சூழலுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறோம்.
"மூலிகைகள் நிறைந்துள்ள இடங்கள் வழியாக தண்ணீர் பாய்ந்து வருவதால் இந்த நீரிலேயே அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன," என்கின்றனர் இந்த கிராம மக்கள்.

