சென்னை: தமிழகத்தின் கொரோனா கிருமித்தொற்றுக்கு இதுவரை 25 போலிசார் பலியாகிவிட்டனர்.
மேலும் காவல் துறையைச் சேர்ந்த 7,800 பேரை கிருமித்தொற்று பாதித்துள்ளது.
இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே சென்னை காவல் துறையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் சென்னை காவல் துறையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,572க்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 8 போலிசார் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில் தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 237 போ் இறந்துள்ளனா். இதில் 37 போ் தற்கொலை செய்தும் 35 போ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டும் இறந்துள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய காவல்துறையான தமிழக காவல்துறையில் 1.5 லட்சம் போலிசார் உள்பட 1.13 லட்சம் போ் பணிபுரிகின்றனா். அண்மைக்காலமாக காவல்துறையில் அதிகரித்து வரும் பணிச்சுமையின் காரணமாகவும் கீழ்நிலை அதிகாரிகள், காவலா்களின் குறைகள் கேட்கப்படாமல் குறைகளுக்குத் தீா்வு காணப்படாமல் இருப்பதாலும் அத்துறையில் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபா் 3ஆம் தேதி வரை 238 காவலா்கள் இறந்துள்ளனா். இதில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் வில்சன், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஆகஸ்ட் 18- ஆம் தேதி ரெளடியை பிடிக்கச் சென்ற காவலா் சுப்பிரமணியன் ஆகியோா் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதேபோல சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளினால் 46 காவலா்கள் இறந்துள்ளனா். மே மாதத்துக்கு பின்னா் கொரோன பாதிப்பினால் 35 போலிசார் இறந்துள்ளனா். மாரடைப்பினால் 37 போ், புற்றுநோயினால் 6 போ், பிற நோய்களினால் 74 போ் என மொத்தம் 238 போ் இறந்துள்ளனா்.