நடிகர் விஜய் சேதுபதி யின் ரசிகர் மன்றத் தலைவரை அந்தப் பதவி மீதுள்ள ஆசையின் காரணமாகவே கொலை செய்த தாக கொலையைச் செய்தவர் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ரசிகர் மன்றத் தலைவர் கடந்த 4ஆம் தேதி கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.
விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த இவருக் கும் மன்ற நிர்வாகியாக இருந்த ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகருக்கும் இடையே அவ்வப்போது மோதல் இருந்து வந்துள்ளது. ராஜசேகருக்கும் தலைவர் பதவி மீது ஒரு கண் இருந்துள்ளது.
இந்நிலையில், நெல்லித்தோப்பு வழியாக தனது மாமியார் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை ராஜசேகரும் அவரது நண்பர்களும் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கிக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து, தலைமறைவான ராஜசேகரையும் அவரது நண்பர்களையும் போலிசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றச் செயலாளர்கள் மூவரைப் பிடித்து அவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தியபோது, ரசிகர் மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக மணிகண்டனுக்கும் ராஜசேகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்ற, முடிவில் ராஜசேகரும் அவரது நண்பர்கள் சுனில், சந்தோஷ், மாறன், ஜான்சன் ஆகிய நால்வரும் இணைந்து மணிகண்டனை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டனர்.
சாயம் பூசும் வேலை பார்த்து வந்த 36 வயது மணி கண்டனுக்கு விஜயகுமாரி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மன்றத்தின் தலைவர் பதவிக்காக ஆசைப்பட்டு அதில் ஏற்பட்ட ஆத்திரத்தால் கூட்டாளிகளுடன் சேர்ந்து மணிகண்டனை கொன்ற தாக ராஜசேகர் வாக்குமூலம் அளித்துள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

