தனது உறவினரான சிறைக்கைதி ஒருவரைப் பார்க்கச் சென்ற வளர்மதி (படம்) என்ற இளம்பெண், பிஸ்கெட்டை துளையிட்டு அதில் கஞ்சாவை நிரப்பி வந்தது சிறைக்காவலர்களின் சோதனையின்போது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணைக் கைது செய்து, அவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூவிருந்தவல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள கிளைச் சிறையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், எண்ணூரில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக கார்த்திக் என்பவரும் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரைப் பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி, 21, பிஸ்கட், பழம் ஆகியவற்றைக் கொடுக்க வந்ததாக போலிசாரிடம் கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னர், போலிசாரை ஏமாற்றிவிட்டு மெல்ல கஞ்சாவை சிறைக்குள் கொண்டு வந்ததை சிறைக்காவலர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
வளர்மதி கொண்டு வந்திருந்த பொருட்களைச் சோதனை செய்த போது, பிஸ்கெட்டை துளையிட்டு அதில் கஞ்சாவை மறைத்து வைத்து அவர் கொண்டு வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பெண்ணை பூவிருந்தவல்லி போலிசாரிடம் சிறைக்காவலர்கள் ஒப்படைத்தனர்.
போலிசாரின் விசாரணையில் பிஸ்கெட்டுக்குள் 50 கிராம் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததை வளர்மதி ஒப்புக்கொண்டார்.

