தாயைக் கவனிக்காத மகன்; சொத்தைப் பறித்து தாயிடமே ஒப்படைத்த அதிகாரி

தாயைக் கவனிக்காத மகன்; சொத்தைப் பறித்து தாயிடமே ஒப்படைத்த அதிகாரி

1 mins read
c55623e6-c169-49a7-a04b-255212853023
படம்: ஊடகம் -

தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு, அவரைப் பராமரிக்காமல் நடுத்தெருவில் நிறுத்திய மகனுக்கு கோவை வருவாய்த் துறை கோட்டாட்சியர் உரிய பாடம் புகட்டியுள்ளார்.

மகனிடம் இருந்த தாயின் சொத்துகளைப் பறித்து தாயிடமே ஒப்படைத்துள்ள கோட்டாட்சியரின் நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை, துடியலூர் அருகே உள்ள அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி, 75. இவரது கணவர் உயிரிழந்து விட, பிள்ளைகளை நம்பி காலந்தள்ளும் சூழ்நிலைக்கு லட்சுமி தள்ளப்பட்டார்.

ஆனால், பெற்ற பிள்ளைகள் லட்சுமிக்கு ஆதரவளிக்கவில்லை.

வயது மூப்பின் காரணமாக பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் ஆளாகி வந்த லட்சுமி, வேறு வழியின்றி தனது நிலை குறித்து வருவாய் தீர்ப்பாயத்திற்குப் புகார் மனு அனுப்பினார்.

மனுவில், தனது மகனுக்குத் தான் எழுதி வைத்த சொத்துகளை முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீட்டுத் தரும்படி கோரினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கும் அவர் மனு அனுப்பினார்.

இந்நிலையில், லட்சுமியின் பிள்ளைகளான சசிகுமார், 42, பரிமளா, 55, சிவகாமி, 45, ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார்.

விசாரணையின் அடிப்படையில், லட்சுமி தனது மகன் சசிகுமாருக்கு எழுதிக்கொடுத்த 4 சென்ட் 314 சதுரடி நிலத்திற்கான 'செட்டில்மெண்ட்' பத்திரம் ரத்து செய்யப்பட்டு, நிலம் லட்சுமியிடமே வருவாய்த்துறை கோட்டாட்சியரால் ஒப்படைக்கப்பட்டது.