தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்காக சுமார் 2,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பொதுவாக தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையைக் கொண்டாட விரும்புபவர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து முழுவீச்சில் இல்லை.
ஒருசில இடங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்களில் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகள் 50 விழுக்காடு வரை இயக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பின் காரணமாக சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சுமார் 4,000 சிறப்பு பேருந்துகள் தீபாவளி சமயத்தில் இயக்கப்பட்டன. சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.
இது குறித்து, "கொரோனா பாதிப்பு குறித்த பயம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தற்போது 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட 50% குறைவாக சிறப்பு பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்," என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
"இது பற்றி அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசித்த பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்," என்றார் அவர்.
ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்படாததால் அரசு சிறப்பு பேருந்து
களுக்கு தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

