சென்னை: பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும்.
இதில் விவசாயிகள் அல்லாதவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு பயனடைந்ததாக புகார்கள் எழுந்தன.ஆரம்பத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இத்திட்டத்தில் ரூ.110 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இடைத்தரகர்கள், அதிகாரிகள் என பலர் இந்த மெகா மோசடியின் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலிசார் கைது செய்து வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 105 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

