சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம) போட்டியிடும் என்றும் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என்றும் அக்கட்சி அறிவித்து உள்ளது.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் நிதி திரட்ட வழிவகைகள், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
தேர்தல் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்கே அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "2021 சட்டமன்றத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்தகருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தது. குறிப்பாக கோவை, தென்சென்னை, வடசென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான வாக்குகளை அக்கட்சி பெற்றது.

