ஆனைமலையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வழக்கின் தொடர்பில், தந்தையின் குற்றத்தைக் கண்டித்து திருத்தாத தாய்க்கும் சேர்த்து ஆயுள் தண்டனை தீர்ப்பாக விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றம்சாட்டப்பட்ட பெற்றோருக்குத் தலா ரூ.1,000 அபராதம் விதித்துள்ள கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், அரசின் சாா்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் வெள்ளியன்று உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி தைரியமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் தங்கி தென்னை நார் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இச்சிறுமியை, தனது மகள் என்றும் பாராமல் சிறுமியின் தந்தை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, சிறுமி தனது தாயிடம் புகாா் கூறியும் கணவரைக் கண்டிக்காமல் அவரும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து, கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆனைமலை போலிசார் பெற்றோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா, குற்றம் நிரூபிக்கப்பட்ட தந்தைக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
சிறுமியை அவரது தந்தை 2018 முதல் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.


