சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமி காரணமாக மதுபானக் கடைகள் பல மாத காலம் மூடப்பட்டதால் புதிய சமூகப் பிரச்சினை தலைதூக்கி இருப்பதாக கவலை கிளம்பி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இளையர்கள் முதல் பலரும் மதுபானத்துக்குப் பதிலாக கஞ்சா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கிறார்கள்.
கொவிட்-19 கட்டுப்பாடு காலத்தில் மதுபானம் கிடைக்காததால் பலரும் கஞ்சாவைப் பயன்படுத்த தொடங்கியதாகவும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து கஞ்சாவையே நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
கஞ்சா வியாபாரிகள் ரவுடிகளின் துணையுடன் போலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு செயல்படுவதால் கஞ்சா புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காய்கறி வாகனங்கள் உள்ளிட்ட அவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லப்படும் வாகனங்களில் மறைத்து கஞ்சா கொண்டு செல்லப்படுகிறது என்றும் இவற்றை போலிஸ் அதிகாரிகள் சில நேரங்களில் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் தெரிகிறது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பல வழிகளிலும் கஞ்சா சென்னைக்குக் கடத்தி வரப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டதன் காரணமாக மதுபான விற்பனை குறைந்ததால் டாஸ்மாக் நிர்வாகம் இது பற்றி அரசாங்கத்திற்கு ரகசியமாக எச்சரிக்கை விடுத்ததாகவும் இதையடுத்து அதிகாரிகள் கஞ்சாவுக்கு எதிரான போரை தொடங்கி இருப்பதாகவும் அவை குறிப்பிடுகின்றன.
இருந்தாலும் இதில் அதிகாரிகள் முழுமூச்சாகச் செயல்படவில்லை என்றும் தரம் குறைந்த கஞ்சாவை விற்பனை செய்யும் நபர்களை மட்டும் அதிகாரிகள் பெயரளவிற்குக் கைதுசெய்வதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆகையால் மாநிலத்தில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கஞ்சா வியாபாரிகள் மற்றும் ரவுடிகளுடன் தொடர்புடைய போலிசாரை கண்காணித்து அவர்களை முதலில் களையெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல்கொடுக்கிறார்கள்.
இல்லையெனில் அந்த நான்கு மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலத்துக்கே பேராபத்து ஏற்பட்டுவிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை குரல் கொடுத்துள்ளனர்.

