தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்ப்பிணிக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக புகார்; ராணுவ வீரரிடம் விசாரணை

2 mins read
e70e5b55-e4cd-4c5b-b058-95fd968242eb
படம்: தமிழக ஊடகம் -

திருப்பத்தூர் அருகே, புகுந்த வீட்டில் 5 மாத கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தார் போலிசில் புகார் செய்துள்ளனர்.

அதன் தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவரான மணிவண்ணனிடம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். திரு மணிவண்ணன் ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடஹ்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 30.

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார் மணிவண்ணன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்யவதனா, 28, என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதியர் பஞ்சாபிலுள்ள ராணுவக் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

சத்யவதனா 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து விமானம் மூலமாக தம்பதியர் இருவரும் பெங்களூருக்கு வந்தனர். அங்கு உறவினர் வீட்டில் இருந்துவிட்டு மறுநாள் சொந்த ஊரான ஆண்டியப்பனூருக்குச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியவதனா கரு கலைந்த நிலையில் திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சத்யவதனாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சத்யவதனா உயிரிழந்தார்.

சத்தியவதனாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் போலிசில் புகார் அளித்தனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு சத்யவதனாவின் உடலை அவரது தாய் வீட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

சத்யவதனா ஏற்கெனவே ஒரு முறை கருவுற்று, அந்தக் கரு கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திரு மணிவண்ணனும் அவரது குடும்பத்தாரும் சத்யவதனாவை கொடுமைப் படுத்தியதாக சத்யவதனாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சத்யவதனாவின் உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவரது பெற்றோர், சத்யவதனாவின் கருவைக் கலைக்க விஷ இலையை அரைத்து அவரைப் பருகச் செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்