தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தமது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனுக்குத் தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நன்னடத்தை, தண்டனைக் குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவெடுக்கப்படும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"கொரோனா கிருமித்தொற்று பரவல் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் எனக்கு வேதனை அளித்துள்ளது. தமிழக மக்களும் பிற மாநில மக்களும் இந்த நோய்த்தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப தினமும் இறைவனை மனதார வேண்டி வருகிறேன்," என்று சசிகலா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை நீதிமன்றத்தில் முறைப்படி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இதுதொடர்பாக டிடிவி தினகரனுடன் ஆலோசித்துச் செயல்பட வேண்டும் என்றும் தமது வழக்கறிஞரிடம் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தவேண்டும் எனும் நோக்கத்துடன் சிலர் தம்மைப் பற்றித் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் சசிகலா தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

