சென்னை: தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒருவழி யாக கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,000க்கும் கீழ் கணிசமாக சரிந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், "இந்த நிலைமையை எல்லோரும் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கிருமி முறியடிப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்," என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இத்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டுவர இன்னும் மூன்று மாதங்கள் வரை பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் எனவும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் ஏழாயிரம், ஆறாயிரம், ஐந்தாயிரம் என பதிவாகி வந்த பாதிப்பு தற்போது மூவாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இந்நிலையை எட்ட முடிந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில், "ஒருபுறம் இத்தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் குறைந்து வந்தாலும் மறுபுறம் பரிசோதனைகளைச் செய்வதிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதிலும் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
"மாநிலத்தில் நாள்தோறும் 80,000க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.
"குறிப்பாக கொரோனா உயிரிழப்பு விகிதம், நோய்ப் பரவல் விகிதம், நோயாளிகளின் எண்ணிக்கை, புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளாவோரின் விவரம் ஆகிய அனைத்துமே குறைந்து வருவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும்," என்று கூறியுள்ளார்.

