ரஜினி: அறிக்கை என்னுடையதல்ல; ஆனால் கருத்துகள் உண்மை

2 mins read
95941cc4-b768-4105-9b46-c90552ded92d
படம்: ஊடகம் -

தன்னுடைய அறிக்கையாக சமூக வலைத்தளங்களில் வெளியானது பொய் என்றும் ஆனால், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைதான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய அறிக்கையில், "என் வயது காரணமாகவும் சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.

அதனால், கொரோனா தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆகையால் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனவே இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, மக்களும் ரசிகர்களும் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்," என்று ரஜினி குறிப்பிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

சமூக வலைத்தள அறிக்கை குறித்து ரஜினி தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், இதுகுறித்தே பலரும் பரபரப்பாகப் பேசி வந்தனர்.

இந்நிலையில், இந்தத் தகவலை ரஜினி மறுத்துள்ளார். அதில் "என் அறிக்கை போலவே ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

"இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை, எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்