தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியீடு

தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியீடு

1 mins read
6066598e-0a7a-4db7-98ef-d46cd55d6c62
தந்தையுடன் நடிகர் விஜய். ப்டம்: ஊடகம் -

தன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எந்த வித நேரடி, மறைமுக தொடர்பு இல்லை என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தன் பெயரையோ, புகைப்படத்தையோ, விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புப்படுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னுடைய தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

"இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்," என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தம் தந்தை தொடங்கிய கட்சி என்பதற்காக தம் ரசிகர்கள் அந்தக் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அக்கட்சிக்கும் தமது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி, "என் பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புப்படுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என விஜய் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்